Wednesday, August 19, 2009

முடித்திருத்தம்

“யெஸ் சார்.. வெல்கம்” - யூனிஃபார்ம் அணிந்த இளைஞன் புன்சிரிப்போடு கண்ணாடிக் கதவு திறந்து வரவேற்றான்.

அது ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் கிளைபரப்பி, புதியதாக எங்களூருக்கு வந்திருக்கும் ஃபேமலி ப்யூட்டி சலூன்.

உள்ளே சென்றதும் சுற்று முற்றும் பார்த்தேன். உயரமான நாற்காலி ஒன்றில் உட்காரவைக்கப்பட்ட குழந்தையொன்று சிரித்தபடி கண்ணாடி பார்த்துக் கொண்டிருக்க அதற்கு வலிக்காமல் முடி வெட்டிக் கொண்டிருந்தார் ஒரு இளைஞர்.

“வாட் கேன் வி டூ ஃபார் யூ சார்?”

முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறை. அங்கங்கே ஆங்கில இதழ்கள். மெலிதான இசை கேட்டுக் கொண்டிருந்தது.

“ஹேர் ஸ்டைல் சேஞ்ச் பண்ணனும்”

“ஷ்யூர் சார். ஐ’ல் ப்ரிங் த புக்லெட்” என்றபடி என்னை அமரச் செய்துவிட்டு போனான்.

எனக்கு சின்ன வயது ஞாபகம் வந்தது.

நினைவு தெரிந்த நாளிலிருந்தே முடிவெட்டிக் கொள்ள நான் செல்வது பழனியண்ணன் சலூன்கடைதான். அவரும் எவரெஸ்ட் சலூன், ஹாலிவுட் சலூன், ஸ்டார் ஹேர்லைன்ஸ் என்று என்னென்னவோ பெயர் மாற்றியிருக்கிறார். ஆனாலும் அது எங்களுக்கு பழனியண்ணன் கடைதான். முடிவெட்டிக் கொள்ள என்றில்லாமல் நண்பர்கள் அவ்வப்போது கூடுமிடமாகவும் அது இருந்தது.

முடிவெட்டிக் கொள்ள போகும்போது கூட்டம் அதிகமாக இருந்தால் அவரே
“குமாரு.. எட்டரை மணிக்கு வர்றியா? சரியா இருக்கும்” என்பார்..

எட்டரை மணிக்குப் போனாலும் ஐந்தாறு பேர் அமர்ந்திருப்பார்கள். பழனியண்ணன் கண்ணால் ஒரு சைகை காண்பிப்பார். ‘கொஞ்சம் பொறுடா’ என்றர்த்தம் அதற்கு. அங்கிருக்கும் பெஞ்சில் அமர்வேன்.

அனைத்து தினசரிகளும், நாளிதழும் இருக்கும். சுவற்றில் பாம்பே டையிங் காலண்டரில் முன்னணி நடிகை சிரித்துக் கொண்டிருப்பாள். அனுராதா, டிஸ்கோ சாந்தி வகையறா ஒட்டப்பட்டிருக்காது எனினும் நிச்சயமாக நடிகைகளின் ப்ளோ அப்புகள் சுவற்றில் இருக்கும். கண்ணாடியில் மூலைகளில் சில விசிட்டிங் கார்டுகள் சொருகப்பட்டிருக்கும். ஒரே ஒரு கண்ணாடிக்கு நேர் எதிர் சுவற்றில் மற்றொரு கண்ணாடி மாட்டியிருப்பார். ‘இன்னொரு கண்ணாடி வாங்கணும் குமாரு. எங்க.. வர்றது கைக்கும் வாய்க்குமே சரியா இருக்கு’ என்பார்.

வாரமலரின் குறுக்கெழுத்துப் புதிரை நான் முடிப்பதற்குள் எனக்கான முறை வந்துவிடும்.

முடிவெட்டி முடித்து எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். ஓரிரு முறை ஒன்றும் கொடுக்காமலே ‘சினிமா போகணும்னே... அப்பா கேட்டா தரமாட்டாரு’ என்று அந்தக் காசை கமிஷனடித்திருக்கிறேன். ஒன்றுமே சொல்ல மாட்டார்.

நடுவில் நாங்கள் சொந்த வீடுகட்டி ஏரியா மாறிய பிறகு அவருடனான தொடர்பு குறைந்தது. கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தபிறகு அவரோடான தொடர்பு முற்றிலும் அற்றுப் போனது.

“எக்ஸ்யுஸ்மி சார்” - புக்லெட்டுடன் வந்த இளைஞன் என் ஃப்ளாஷ்பேக்கைக் கலைத்தான். “ ஃபோர் ஹண்ட்ரட் வரும்சார். உங்க ஃபேஸ் கட்டுக்கு இதோ இந்த நாலு ஸ்டைலும் பொருந்தி வரும் சார்” என்றான்.

“எவ்வளவு நேரமாகும்?”

“ஒன் ஹவர்” என்றான்.

சம்மதித்து கிங்க்ஸ் என்றெழுதப்பட்ட அறைக்குள் அழைத்துச் செல்லப் பட்டேன். ஷாம்பூ வாஷ் என்று ஈஸி சேர் ஒன்றில் படுக்க வைத்து குளிக்க வைக்கப்பட்டேன். முடித்ததும் தலையை கருப்பு பூத்துவாலையால் துடைத்துவிட்டார்கள். எனக்கு மறுபடி பழனியண்ணனும் அவர் தோளில் கிடக்கும் ஈரிழைத்துண்டும் ஞாபகத்துக்கு வந்தது.

அரைமணி நேரம் தலையை என்னென்னவோ செய்தார்கள். நான் போட்டிருந்த டீ ஷர்ட் கொஞ்சமும் கசங்காமல் மென்மையாக என்னைக் கையாண்டார்கள். இடையே சில நிமிடங்கள் என் தலை காய அமரவைக்கப்பட்டபோது தடிமனான சில புத்தங்கங்கள் தரப்பட்டது. எதுவும் பழனியண்ணன் கடை வாரமலருக்கு ஈடாகுமாவெனத் தோன்றியது.

எல்லாம் முடிந்து என்னை சரிபார்த்துக் கொண்டே முன்னறையில் வந்து அமர்ந்தேன்.

பில் கொண்டு வரப்பட, காசை எடுத்து வைத்து விட்டு வாசல் நோக்கி நடந்தேன்.

கதவருகே வந்த இளைஞன் ‘தேங்க்யூ சார்’ என்று கண்ணாடிக் கதவைத் திறந்தான். வெளியே இன்னோவா ஒன்று வந்து நிற்க.. அந்த இளைஞன் ‘பாஸ் வந்துட்டாரு’ என்று உள்ளே திரும்பி குரல் குடுத்தவாறு எனக்கு புன்னகையைச் சிந்தினான். தூரத்தில் நின்ற இன்னோவாவிலிருந்து கதர் வேட்டி சட்டையோடு யாரோ இறங்குவது தெரிந்தது.

என் காரருகே செல்லும்போதுதான் இன்னோவாவிலிருந்து இறங்கி என்னைக் கடந்து செல்லும் நபரைப் பார்த்தேன்..

தோளில் அதே ஈரிழைத்துண்டோடு - பழனியண்ணன்.

No comments: