ஓஷோ சொல்லும் கதைகளில் ஒன்று இது
திண்ணையில் அமர்ந்திருந்த தருமரிடம் பிச்சை கேட்கிறான் ஒருவன். ஏதோ வேலையாய் இருந்த அவர் ‘நாளைக்கு வாப்பா’ என்கிறார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பீமன் உடனே முரசை எடுத்துக் கொண்டுபோய் கிராமத்தின் நடுவில் நின்று கொண்டு முரசடிக்கிறான்.
“தம்பி... என்னப்பா செய்கிறாய்? எதற்கு இப்போது முரசடித்து ஊரைக்கூட்டுகிறாய்?” என்று கேட்கிறார் தர்மர்.
“எங்கள் அண்ணன் காலத்தை வென்று விட்டான்’ என்று இந்த ஊருக்கு அறிவிக்கப்போகிறேன் அண்ணா..”
தருமருக்கு ஒன்றும் விளங்கவில்லை. “காலத்தை வென்றேனா.. நானா..?” குழப்பத்தோடே கேட்கிறார்.
“ஆமாம் அண்ணா. பிச்சைக்காரரை நாளைக்கு வரச் சொன்னீர்களே? நீங்கள் நாளைக்கு இருப்பீர்களா? அவன் நாளைக்கு இருப்பானா? நீங்கள் இருந்தால் பிச்சையிடும் மனோபாவம் உங்களுக்கு இருக்குமா? அவன் இருந்தால் நாளைக்கும் அவன் பிச்சைக்காரனாகவே இருப்பானா? நாளைக்கு உங்கள் இருவரின் சந்திப்பு நடைபெறுமா? அப்படியே நடைபெற்றாலும் பிச்சை போடுவீர்களா? எவ்வளவு நிச்சயமாய் இத்தனை கேள்விகளின் சாத்தியங்களை உணர்ந்து நாளை அவனை வரச் சொன்னீர்கள்? அப்படியானால் நீங்கள் காலத்தை வென்றுவிட்டீர்கள் என்றுதானே அர்த்தம்? என்னை விடுங்கள். இப்போதோ இதை ஊராருக்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை இந்த கணத்தை நான் தவறவிட்டால் அடுத்த கணம் நிச்சயமாய் என் வசமில்லை. அதனால்தான் இப்போதே அறிவிக்கிறேன் என்று அவசரப்படுகிறேன்” என்றான் பீமன்.
“பொறு தம்பி. தவறுதான். அவனை அழை. இப்போதே உதவுகிறேன். நாளை என்ன அடுத்த நிமிஷமே நிஜமில்லைதான்” என்று சொல்கிறார் தருமர்.
ஆக.. நல்லதை அன்றே அப்போதே செய்துவிடுங்கள். இந்த நிமிஷம் மட்டுமே நிஜம்!
Thursday, April 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment